அலி ஸாஹிர் மௌலானா மற்றும் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் (வீடியோ)


(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே பரஸ்பர தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக
ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலி ஸாஹிர் மௌலானா மற்றும் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய இரு
வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓரு தரப்பினரின் வாகனம் ஒன்றின்மீது கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றைய அணியினரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்.ஜி.ஏ நாஸர் அறிவித்துள்ளார்.

இச்சம்பவங்களில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் எட்டுப்பேர் தேடப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவங்கள் பற்றித் தெரிவிக்கப்படுவதாவது...

ஒரு குழுவினர் வேட்பாளர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது மற்றைய வேட்பாளரது ஆதரவாளர்கள் வேன் ஒன்றில் வந்து கிழித்து வீசிய வேளை அந்த வாகனத்தின்மீது கல்வீசப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இன்று அதிகாலை 12.30 மணியளவில் இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் வந்த சிலர் வேட்பாளரது ஆதரவாளரின் வீட்டின்மீது
பெற்றோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் வீட்டுவாசலில் நிறத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளது. இச்சம்பவங்கள் குறித்து ஏறாவூப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.