நீதிபதிகள் தயாரித்த அறிக்கையை சாதாரண தரம்கூட சித்தி பெறாதவர்கள் பரிசீலிப்பதா?

 


நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை கர்தினால் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் கருதினால் மெல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் சில தகவல்களை வெளிவிடுவதற்கு அஞ்சுகின்றது. ஆணைக்குழு சேகரித்த அனைத்து தகவல்களையும் ஆணைக்குழு தெரிவித்துள்ளவாறே வெளியிட வேண்டும் என கருதினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயங்களில் எவற்றையும் மறைக்க முடியாது அல்லது தெரிவு செய்த சில விடயங்களை மாத்திரம் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அச்சிட்டு வெளியிடுவது பெரிய விடயமல்ல முதுகெலும்புள்ள தலைவர்களை எங்களுக்கு அவசியம் எனவும் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த தேவாலயத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் நாங்கள் எங்கள் தலையை கவிழ்க்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்று அலட்சியமாகயிருந்தால் நாங்கள் எங்கள் வழிமுறைகளை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ள கருதினால் மெல்கம் ரஞ்சித் நாங்கள் சர்வதேச கத்தோலிக்க திருச்சபைக்கு சென்று போராடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்த ஐந்து நீதிபதிகள் தங்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். இதன் காரணமாக அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ள கருதினால் மெல்கம் ரஞ்சித் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்களை இந்த விடயம் குறித்து தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப் போகின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.