உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலுள்ள வயல்களிலிருந்து கால்நடைகளை வெளியேற்றுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலுள்ள வயல்  பிரதேசங்களிலிருந்து கால்நடைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கணங்குளம் மற்றும் புத்தம்புரி வயல் பகுதிகளில் கால்நடைகளின் தொல்லை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, கணங்குளமடு கமநல அமைப்பின் செயலாளர் தம்பிராசா கனகசேகரம் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கரடியனாறு கணங்குளமடு கமநல அமைப்பு தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருவதாவது,

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதும் கரடியனாறு பொலிஸ் நிர்வாக எல்லைக்குட்பட்ட புத்தம்புரி தேக்கம் சோலைப் பகுதியில் கால்நடை வளர்ப்போர் பலர் தங்களது கால்நடைகளை மேய்த்தும் அடைத்தும் பராமரித்தும் வருகின்றனர். இதனால்,  2014 - 15 ஆண்டு வரையான பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள இப்பகுதி விவசாயிகள் பாதிப்படையும் நிலைமை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கால்நடை உரிமையாளர்களிடம் பலமுறை இப்பகுதி விவசாய பிரதிநிகள் ஊடாக அறிவித்தும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை உரிய மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லவில்லை என்பதை தங்களின் கவனத்துக்கு மனவேதனையுடன் அறியத்தருகிறோம்.

மேலும்,  கடந்த 2013 -  14 பெரும்போகச் செய்கை, கால்நடை வளர்ப்போர்களால் 50 சதவீதத்துக்கும் மேல் பாதிப்படைந்ததையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். எனவே, இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு கால்நடை மேய்ப்போரையும் இப்பகுதியில் தளமமைத்து பராமரித்து வருபவர்களையும் உரிய மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன், கால்நடைகளிடமிருந்து விவசாயிகளினது பயிர்ச்செய்கையை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கணங்குளமடு கமநல அமைப்பு சார்பாக தங்களை பணிவாக வேண்டிக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட விவசாய அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர், பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, கரடியனாறு கமநல சேவை நிலைய பெரும்பாக உத்தியோகஸ்தர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.