செங்கலடி நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்

செங்கலடி நகரில் கறுத்தப்பாலத்தை அண்டிய குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானைகள் வீட்டுத் தோட்டங்களை துவசம் செய்துள்ளன. இதனால் தமக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து யானைகள் கறுத்தப் பாலத்தை அண்மித்த காட்டு பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து பயிர்களை அழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை புகுந்த காட்டுயானைகள் வீட்டுத் தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள், கரும்பு மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

செங்கலடி வைத்தியசாலைக்கு முன்பாக, மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதால் அப்பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த காலங்களில் வயல் மற்றும் வயல் சார்ந்த பிரதேசங்களிலேயே காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்தன.

தற்போது பொதுமக்கள் செறிந்து வாழும் நகரை அண்மித்த பகுதிக்குள் காட்டு யானைகள் வரத் தொடங்கியுள்ளமை துரதிர்ஷ்டவசமானதென தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிவில் வந்தாறுமூலை, பெரியபுல்லுமலை, ஏறாவூர் ஐந்தாம்புகுறிச்சி போன்ற பகுதிகளிலும் வீட்டுத் தோட்டம் மற்றும் வீட்டில் களஞ்சியகப்படுத்திய நெல் என்பவற்றை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது