தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுத்திப்படுத்த தேசிய அரசு அவசியம் மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்

(பேரின்பராஜா சபேஷ்) தமிழ் மக்களுக்கு நீடித்து நிற்கக் கூடிய சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய பாரம்பரிய பிரதேசங்களை அங்கிகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்லுவதற்கு தேசிய அரசாங்கத்தின் தேவை அவசியம் என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ந.சிவனடியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

“1949ஆம் ஆண்டு எமது மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது இந்த நாட்டிலே தமிழர்கள் தங்களை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காகக் குரல் கொடுத்தவர் தந்தை செல்வா அவர் தலைமைதாங்கியதன் பின்னர் நாங்கள் யார்? எங்களது மூதாதையர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என தமிழர்கள் தங்களை எண்ணிப்பார்த்தார்கள். இந்த நாட்டிலே நாம் தமிழர்களாக வாழ வேண்டும் என்றால் நம்முடைய அடையாங்களைப் பேணிக்கொண்டு ஒரு தலைமையின் கீழ் அணி வகுத்திட வேண்டும் என்ற நல்ல செய்தியைச் சொன்னவர் தந்தை செல்வா. அவருடைய செயற்பாட்டின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாம் தமிழர் என்ற அடையாளத்துடன் தமிழ் இனம் என்ற பெயருடன் இருக்கிறோம்.

தந்தை செல்வாவும் ஏற்கனவே இருந்தவர்களைபட போல அரசுடன் கைகோர்த்து அவர்கள் கொடுக்கும் பதவியைப் பெற்று அவர்களுக்கு ஆமா சாமி போட்டுக்கொண்டிருந்திருந்தால் சித்தாண்டி திருத்தலத்திலே முருகன் இருப்பாரா? அல்லது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் ஒரு தெய்வம் இருக்குமா? தமிழரசுக் கட்சி என்ன செய்தது என்று கேட்கும் அன்பர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறுமனே ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு அபிவிருத்தி என்று பேசிக்கொண்டிருந்தால் தமிழினம் இருந்திருக்குமா? எமது பிள்ளைகள் தமிழிலே அச்சடித்த புத்தங்களில் பாடங்களைப் படித்திருக்க முடியுமா? எங்களுடைய நீதி மன்றங்களிலே தமிழ் மொழியிலே பதிவேடுகள் வைத்திருக்க முடியுமா? நிருவாக மொழி தமிழாக இருந்திருக்க மாட்டாது. போதனை தமிழ் மொழியாக இருந்திருக்க முடியாது இத்தனையும் காப்பாற்றி நம்மை தமிழர்களாக மாற்றியிருக்கும் தமிழரசுக் கட்சி தந்தை செல்வா எமக்கு தந்த சொத்து அதனை நாம் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். .

இந்த நாட்டிலே தற்போது வித்தியாசமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது 1957 மற்றும் 1967ம் ஆண்டுகளில் இவ்வாறான சூழல் ஏற்பட்டது. டட்லி செல்வா ஒப்ந்தம் ஏற்பட்ட பின் அமைக்கப்பட்ட தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் இணைந்து செயற்பட்ட காரணத்தால் நீதி மன்றங்களில் தமிழ் மொழி மாவட்ட சபைகளுக்கு ஒத்த நிருவாக சபை உருவாக்கப்பட்டன. அதற்குப் பிந்திய காலங்கள் சற்று வேறுபட்ட காலங்களாக மாறி ஒரு வீர யுகம் உருவாகியது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் அன்று ஏற்பட்ட சூழல் இந்தியா தனது வரலாற்றை நிலை நிறுத்த நினைத்தது. இளைஞர்களுக்கு உயர்ச்சியூட்டியது அதன் காரணமாக எமது பாரிய மாற்றம் ஏற்படுத்தியிருக்க முடியும் எமது துர்ப்பாக்கிய சூழல் அன்னை இந்திரா கொல்லப்பட்டார். எம்முடைய பிரச்சினையை தெரியப்படுத்த முடியாத ராஜூவ் காந்தி ஆட்சிப் பீடம் ஏறியதும் எல்லா சூழலும் மாறியது. 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதும் உலக அரசியல் சூழல் வேறுவிதமாக மாறியது உண்ணதமான போராட்டங்கள் பயங்கரவாத சாயல் பூசப்பட்டது. எம்முடைய வீரர்கள் சரியான முறையில் அரசியலை நடாத்த முடியாவர்களாக காணப்பட்டார்கள் சார்த்தீமத்தையும் ஒன்றாக கொண்டு செல்லும் நிலமையை அவர்கள் தவிர்த்துவிட்டார்கள். இதன் காரணமாக நாங்கள் துர்ப்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டோம்.

எமது வீரர்களின் பலத்தைக் கண்டு உலகமே வியர்ந்தது அவர்களை ஒரு வழிக்கு கொண்டுவருவதற்கு அழிப்பதே ஒரே வழி என அவர்க்ள நினைத்தார்கள் இந்த விடயம் இங்கிருந்த  ராஜபக்ஷ அரசுக்கு சதகமாகவிருந்தது. வெறும் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருந்த இராணுவத்தினருக்கு ஆயுதங்களை வழங்கி எமது உடன் பிறப்புக்களை துடிக்கத் துடிக்க கொன்றார்கள் பல்குழல் தாக்குதல்கள் மூலம் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் பொதுமக்களை ஒரிரு நாட்களுக்குள் கொன்று குவித்தார்கள். 2009 மே மாதம் எமது வீர யுகம முடிவுற்றது.

அன்று முதல் அழிந்தது தமிழினம் அழிந்தது தமிழினத்தினுடைய உணர்ச்சி இனி முழு நாட்டுக்கும் நான்தான் ராஜா என ஒரு பெரியவர் புறப்பட்டார். அந்த பெரியவருக்கு எரிகின்ற வீட்டுக்கு நெருப்பள்ளி கொடுக்க தம்பிகள் இங்கிருதார்கள் உள்ளே இருந்து ஓட்டைகள் போட்டு கப்பலை கவிழ்த்துவிட்டு அங்கு வந்த மிதவைக் கப்பலிலே ஏறி வந்த ராஜாவுடன் சேர்ந்தவர்கள் எங்களை பல காலம் முகம்காட்டமுடியாமல் தடுத்துவைத்தார்கள்.

வடக்கிலே ஏற்கனவே நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த போதிலும் அது கைவிலங்கு இடப்பட்ட ஆட்சியாக காணப்பட்டது. ஆனால் தைமாதம் 8ம் திகதிக்கு பின்பு நடந்த ஆட்சி மாற்றத்தின் காரணமாக அனைத்தும் மாறியுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்பு கிழக்கிலே என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என சிலர் பேசித் திரிகிறார்கள் சம்ப+ரிலே அகதியாக இருந்து வெளியேற்றப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 5000 ஏக்கர் காணியை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஆட்சிமாற்றத்தழன் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்த தேசிய அரசு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.       

கிழக்கு மாகாண அமைச்சு பதவி கிடைத்ததிலிருந்து மூன்று மாவட்டத்திற்கும் சென்று பல அணைகள், வாய்கால்கள், வயல்களைப் பார்வையிட்டு விவசாய செய்கை மேம்படுத்த என்ன நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

உறுகாமம் குளத்திலிருந்து வரும் நீரை பூமாசோலை பகுதியில் மறிப்பதன் காரணமாக சின்வெளி சின்னானம்வெளி போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்படுகின்றன. கிரான்புல் அணையினை கட்டுவதன் மூலம் வேறு இடங்களிலிலிருந்து வரும் நீரினை நம்பியிருக்கம் அவசியம் காணப்படாது. எமது பிரதேச கிணறுகளிலும் நீர் பற்றாக்குறை காணப்படாது.

ஜூன் மாதம் சித்தாண்டி கோழித் தீன் தொழில்சாலை இயங்க நடவடிக்கையெடுத்துள்ளோம் அதன் மூலம் இந்த பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். மண்டூரில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள பண்ணையை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தும்பங்கேணியில் பால் சேகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்து யோக்கட் தயாரிக்ககூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுத்திக் கொடுக்கப்படும். இதைப் போன்று திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம்

ஆட்சி மாற்றத்தை நாங்கள் சரியாக பயன்படுத் வேண்டும் தெற்கிலே இருக்கின்ற நல்ல சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும் வருகின்ற பொதுத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் கை ஓங்கவேண்டும் அவ்வாறு ஓங்குகின்ற போது வடக்கு கிழக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை ஓங்கி நிற்க வேண்டும் அதன் மூலம் இன்னுமொரு தேசிய அரசாங்கம் ஏற்படும் இந்த தேசிய அரசாங்கத்தின் மூலம் எங்களுடைய தேசிய பிரச்சினையை உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவிருப்போம்.

நீடித்து நிற்கக் கூடிய தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசங்களை அங்கிகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்லுவதற்கு தேசிய அரசாங்கத்தின் தேவை அவசியம் அதற்க தெற்கிலே இருக்கக் கூடிய நிதான சக்திகளுக்கு நாங்கள் ஆதரவ வழங்க வேண்டும். தமிழர்கள் எந்த காலத்திலம் தேசிய இனம் என்ற இலக்கைவிட்டு மாறமாட்டார்கள் என்ற ரீதியில் நாங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார்;