ஜெனரேட்டர் வாயு விஷத்தால் தந்தையும் மகனும் உயிரிழப்பு !


ஜெனரேட்ரை இயக்கிவிட்டு இன்று (23) அதிகாலை உறங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புபுரஸ்ஸ நெஸ்டா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய தந்தையும் அவருடைய 17 வயதான மகனுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் வெசாக் கொண்டாட்டத்திற்காக புபுரஸ்ஸ நகரில் அன்னதானத்தை வழங்க தயாராகி கொண்டிருந்தனர்.

நேற்று (22) அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக அறையில் இருந்த ஜெனரேட்டரை இயக்கிவிட்டு இருவரும் உறங்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இருவரும் எழுந்திருக்காததால், அன்னதானத்தினை ஏற்பாடு செய்ய வந்த குழுவினர் இது குறித்து புபுரஸ்ஸ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட சோதனையில் மகன் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் கம்பளை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காந்தி பெர்னாண்டோ சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.