நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயிகளுக்கு நன்றி உணர்வாக விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தம்புத்தேகம பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய இரசாயன மருந்துகள் உரம் என்பவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு இருட்டடிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விலைக்கு பொருட்கள் வழங்கப்படும்.
விவசாயிகளின் விவசாய உற்பத்திக்கு நியாயமான நிர்ணய விலை ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும். மோசடியான முறையில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதிக்கின்ற ஏற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நுகர்வோருக்கும் சாதாரண விலையில் பொருள் கிடைப்பதோடு நெல்லுக்கும் உயர்ந்த நிர்ணய விலை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
பிணைகள் இன்றி அரச வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ள செல்வந்தர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு நட்புறவைப் பேணி அந்தக் கடன் தொகைகளை இரத்துச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் விவசாயிகளின் கடன்களை அரசாங்கத்தினால் இரத்துச் செய்ய முடியாமல் போயுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கு உணவளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி உணர்வாக இந்தக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.













