மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்த உணவகங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல்வைப்பு


மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் நேற்றிரவு (16)மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் காரணமாக மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையில் 52 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் வைத்தியர்கள் இணைந்து குறித்த பாரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி,காத்தான்குடி, பட்டிப்படை, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் தலைமையில் ஐந்து பிரிவுகளாக மேற்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மனிதபாவனைக்குதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 72 உணவகங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதவர்கள் தெரிவித்தனர்.

சுற்றிவளைப் பின் போது பெருமளவு மனித பாவனைக்குதவாத நுகர்விற்கு பொருத்தமற்ற சமைத்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார துறையினர் மேலும் தெரிவித்தனர்.