பாணில் மனித விரலின் தோல் துண்டுகள்


ஹட்டன் நகரின் வெதுப்பகம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை வாங்கிய பாணில் மனித விரலின் தோல் துண்டுகள் இருந்ததைக் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

ஹட்டன் பிரதான நகரில் இயங்கும் வெதுப்பகம் ஒன்றில் 180 ரூபாய்க்கு பெற்றுக்கொண்ட பொதி செய்யப்பட்ட பாணினை திறந்துபார்த்த போது இடையில் மனித விரலின் தோல் துண்டுகள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹட்டன் டிக்கோயா மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுத்த சுகாதார பரிசோதகர்கள் பாணில் கை விரலின் தோல் துண்டுகள் இருப்பதை உறுதி செய்து வெதுப்பகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வெதுப்பகத்தில் இதற்கு முன்னரும் சுகாதாரமற்ற உணவு வகைகள் தயாரித்து விநியோகிக்கப்படுவதாக ஏற்கெனவே கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கு சுகாதார அதிகாரிகளால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் .