ரணிலின் வெளிநாட்டு விஜயங்கள்: அரசுக்கு ரூ. 1007 மில்லியன் செலவு !



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஒரு வருட காலத்தில் மேற்கொண்ட 8 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 14.9 மில்லியன் ரூபா மாத்திரமே செலவாகியுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. அந்த செலவுகள் தற்போதைய ஜனாதிபதியினால் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ரணில் விக்கிரமசிங்க 2022இல் நான்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன்போது 64 பேர் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்காக 129.31 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

2023இல் 16 வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்போது 269 பேர் அவருடன் சென்றுள்ளனர். அதற்காக 577.9 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2024இல் 5 பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளதுடன் அதன்போது 115 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்காக 300 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

22 மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 24 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 385 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் மாதத்திலிருந்து 2025 செப்டம்பர் மாதம் வரையில் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுக்காக 14.9 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.