மின்சார சபைக்கு 13 பில்லியன் ரூபா நஷ்டம் என்பதில் எந்த உண்மையும் இல்லை , மாறாக 21000 மில். ரூபா இலாபமே - எஸ்.எம்.மரிக்கார்



இலங்கை மின்சார சபை 13 பில்லியன் ரூபா நஷ்டம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. மாறாக 21000 மில்லியன் ரூபா இலாபமே அடைந்துள்ளது. ஆனால் கடந்த கால கொள்கைகள் மற்றும் வீணடிப்புகளையும் இதில் இணைத்து நஷ்டமாக காட்டி அந்த சுமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வலுச் சக்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வலுச் சக்தி என்பது மக்களினதும், பொருளாதாரத்தினதும், அபிவிருத்தியினதும் இரத்தம் என்றே கூறியது. விலை சூத்திரத்தை திருட்டுத்தனமான சூத்திரம் என்றும் ஜே.வி.பியினரே கூறினர். ஆனால் அந்த சூத்திரத்தின்படியே இந்த அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களும் நடக்கின்றன. 9000 ரூபா கட்டணத்தை 6000 ரூபாவாக குறைப்பதாகவே கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு வருடம் கடந்தும் அதே இடத்திலேயே இருக்கின்றனர்.

இவர்கள் மின்சார சபை 13 பில்லியன் ரூபா நஷ்டம் என்று கூறுகின்றனர். இது பொய்யாகும். இந்த சபைக்கு 21,000 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த கால கடன்கள் அனைத்தையும் சேர்த்தே இந்த செலவை இவர்கள் தயாரிக்கின்றனர். இவ்வாறு கூறி கொள்ளையடித்த மற்றும் வீணடித்த தொகையை பாவனையாளர்கள் மீது சுமத்துவதற்கே முயற்சிக்கின்றனர்.

அத்துடன் மின்கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் எதிர்வரும் மாதங்களில் வறட்சி உள்ளிட்ட காரணங்களை காட்டி மாபியாக்களுக்கு சாதகமான வகையில் செயற்படும் வகையில் நிதி அமைச்சின் ஊடாக குறித்த ஆணைக்குழுவுக்கு கட்டண அதிகரிப்பு தொடர்பான உத்தரவுகள் செய்யப்படுகின்றன. கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் கட்டணங்களை குறைக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் இருக்கின்றனர்.திறைசேரியில் போதுமான நிதி இருப்பதாக கூறுகின்றனர். அப்படியென்றால் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி மின்கட்டணத்தை குறைக்க முடியும்தானே.

மின்சார துறையில் இவர்கள் மறுசீரமைப்பை மேற்கொண்டு நான்கு நிறுவனங்களாக பிரித்தனர். ஊழியர்களை மற்றும் போது ஊழியர்களுக்கு கொடுக்கும் நஷ்ட ஈட்டை கொடுக்க 10 பில்லியனாவது செலவாகும். அதனையும் நுகர்வோர் மீது சுமத்தலாம். அத்துடன் மின்சாபையின் பழைய அதிகாரிகளே குறித்த நான்கு நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இப்போது அதன் செலவுகளையும் பாவனையாளர்கள் மீதே சுமத்த முயற்சிக்கின்றனர் என்றார்.