
அரச வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 150 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி மற்றும் கண் நோய்களுக்கான மருந்து ஆகிய மருந்து வகைகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியசாலை கட்டமைப்பில் தொடர்ச்சியாக நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை வழங்குவதில் உருவாகியுள்ள நெருக்கடித் தொடர்பில புதன்கிழமை (19) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்க தரமான மருந்துவகைகளை தொடர்ச்சியாக விநியோகிப்பது அவசியம். மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், இரசாயன பரிசோதனைகளுக்கு அவசியமான உபகரணங்கள், கதிரியல் பரிசோதனைக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வைத்தியசாலைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றுத்தருவது சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் முக்கிய கடமை. வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.
இதனால் வைத்தியசாலைக்கு வருகைத்தரும் நோயாளர்கள் முதற்கொண்டு சிகிச்சை சேவைகளை வழங்கும் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கக் கிளை அலுவலகங்களில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அரச வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 150 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றா நோய்க்கான மருந்து, வலி நிவாரணி மற்றும் கண் நோய்களுக்கான மருந்து ஆகிய மருந்து வகைகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாமையால், நோயளர்கள் அவற்றை தனியார் மருந்தகங்களில பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதய சத்திரசிகிச்சை உள்ளிட்ட சந்திர சிகிச்சைகளுக்கு அவசியமான உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாமையால் வைத்தியசாலைகளில் பல சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.



.jpg)







