ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி அது தொடர்பில் ஆராய்வதற்காக 320 இலட்சம் ரூபாயேனும் செலவாகும் - சாமர சம்பத்


ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பில் ஆராய்வதற்காக பெருமளவில் செலவு செய்து குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பார்த்தால் ரணிலுக்கு எதிரான விசாரணைகள் முடிவடையும் போது குறைந்தது 320 இலட்சம் ரூபாயேனும் செலவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது சாமர சம்பத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

160 இலட்சம் ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் கைது செய்தீர்கள். இப்போது இது தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக ஐந்து அதிகாரிகள் இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு செல்வதென்றால் விமான டிக்கட் ஒன்று மூன்று முதல் நான்கு இலட்சங்கள் வரையில் இருக்கும். இவர்கள் ஐந்து நாட்களுக்காக அங்கு சென்றுள்ளார்கள் என்றால் தங்குமிட செலவு உள்ளிட்ட செலவுகளை பார்க்கும் போது குறைந்தது 50 இலட்சமாவது ஆகும்.

இந்நிலையில் இந்த விசாரணைகள் முடிவடையும் போது, வழக்கு விசாரணைகளுக்காக 320 இலட்சம் ரூபாவாது செலவாகியிருக்கும். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஸ்டம் என்றால் இறுதியில் பொலிஸ் திணைக்களத்திற்கும் பெருமளவில் செலவாகும் இதுவே எமது நாட்டின் நிலவரம் என்றார்