திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் 30 வீதமானோர் போதைக்கு அடிமை !



நாட்டிலுள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலானோர் ஐஸ் (Ice), ஹெரோயின், கஞ்சா மற்றும் மதுபானம் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக, ட்ரான்ஸ் சமத்துவ அறக்கட்டளை (Trans Equality Trust - TET) கவலை தெரிவித்துள்ளது.

ட்ரான்ஸ் சமத்துவ அறக்கட்டளை (TET) இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுனி மாயாதுன்ன இது குறித்து கூறுகையில்,

தமது அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளின்படி இலங்கையில் 5,000 இற்கும் அதிகமான திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமது குடும்பங்களாலும் வீடுகளாலும் ஒதுக்கப்பட்ட பின்னர், கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாடகை அறைகள் அல்லது பகிரப்பட்ட விடுதிகளில் வசிப்பதாகவும், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் போதைப்பொருட்களுக்கான பணத்திற்காக இத்தொழிலை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிகிச்சையின் போது கவனித்துக்கொள்வதற்கு குடும்ப ஆதரவு அமைப்பு இல்லாததால், பலர் போதை மறுவாழ்வு திட்டங்களைத் தவிர்க்கின்றனர் என்றும் மாயாதுன்ன தெரிவித்தார்.

இதேவேளை, திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ட்ரான்ஸ் சமத்துவ அறக்கட்டளை (TET) ஆனது, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதில் கைதுக்குப் பின்னரான தாக்குதல்கள், சட்டவிரோத தடுப்புக்காவலில் வைத்தல், புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பரவலான சமூகத் துன்புறுத்தல் போன்ற விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

திருநங்கைகளின் பால் அடையாளங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், வைத்தியசாலை ஊழியர்கள் பெரும்பாலும் அவசரகால சிகிச்சை வழக்குகளைத் தவறாகக் கையாள்வதாகவும், இது மேலதிக சிகிச்சைக்குத் தடைகளை உருவாக்குவதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருநங்கை பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடி தலையீடு மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி, பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ட்ரான்ஸ் சமத்துவ அறக்கட்டளை (TET) திட்டமிட்டுள்ளதாகவும் கசுனி மாயாதுன்ன தெரிவித்தார்.