நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது.
ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார்.
அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது.
பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம்.
இல்லை... அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை.
சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டது.
தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும்.
இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் (பிரச்சினை செய்கிறார்கள்)?... அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன.
நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள்.
எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.




.jpg)







