எனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை - நாமல் ராஜபக்ஷ !


தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 'பி அறிக்கை' மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் 'பி அறிக்கை' ஒன்றைத் தாக்கல் செய்து எனது பட்டப்படிப்பு குறித்து விசாரிக்க அனுமதி பெற்றது. அதன் பிறகு மாதக்கணக்கில் இது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்று வரை நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இணையத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது. இப்போது நுகேகொட பேரணிக்குக் கடுமையாகப் பயந்துவிட்டார்கள். அதனால் பொய்களைப் பரப்புகிறார்கள். இந்த அவதூறுகள் மற்றும் பழிகள் அனைத்துக்கும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும்" என்றார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாமல் ராஜபக்ஷவின் சட்டப் பட்டச் சான்றிதழ் தொடர்பாக சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலளிப்பது அவரது பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.

எனினும், பாராளுமன்றத்தின் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கருத்துத் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போதும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு இதுவரையில் எந்தவொரு விடயத்தையும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

"அரசாங்கம் தோல்வியடையும் போது அவதூறு பரப்புவது அவ்வளவு நல்லதல்ல" என்றும் டி.வி. சானக்க மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.