என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி - நியூசிலாந்துப் பெண்


என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அறுகம்குடா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் குறித்த வெளிநாட்டு பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் சேட்டையில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் இது தொடர்பில் கடிதம் ஊடாக பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனக்கு நேர்ந்த விடயத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை மக்களுக்கும் பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு அல்லது மக்களின் பண்பைப் பிரதிபலிக்காது எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் தனியாக சுற்றுலா பயணங்களை மேற்கொண்டதாகவும் இலங்கை மக்கள் பல வழிகளில் தனக்கு உதவியதாகவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

இலங்கை என்பது பயணம் செய்வதற்கு மிகவும் அற்புதமான ஒரு நாடு எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

ஒரு தனிநபரின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த நாட்டையும் பெண்களின் பாதுகாப்பையும் வரையறுக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் உலகில் எங்கும் நடக்கக்கூடும் என அந்த நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.