தமிழரின் “ஒருத்தனுக்கு ஒருத்தி” கலாசாரத்தை கடைப்பிடிக்காமல், யாரை திருமணம் முடித்துள்ளேன் என்றும் கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள் - இளங்குமரன் MP



ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதை கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதை கூறிக்கொள்கின்றேன் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த ஒரு வருட காலத்தில் பல அபிவிருத்தி கருத்திட்டங்களை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள சிலர் எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு போகுமாறு கூறுகின்றனர்.

இந்த பாராளுமன்றத்தில் கோர்ட் அணிந்துகொண்டு இருந்தவர், இப்போது யாழ்ப்பாணத்தில் வேட்டியுடன் வலம் வருபவர் பாராளுமன்றத்திற்கு வர துப்பில்லாதவர்கள், தமிழரசுக் கட்சி அழிவதற்கு மூலக் காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுமாறு கூறுகிறார்கள். ஆனால் அவரால் யாழ்ப்பாணத்திற்கு சென்று தன் பிள்ளைகள் எங்கே இருக்கின்றனர். யாரை திருமணம் முடித்துள்ளனர் என்பதனை துணிச்சலாக கூற முடியாது.

அதேபோன்று இங்கே கமராவுக்கு முன்னால் வீர வசனம் பேசுபவர், இங்கே தமிழர்களை அழித்தவர்களுடன் கமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கூட்டாக கைகோர்த்துக்கொண்டு இருக்கின்றார். எங்களை பதவி விலகுமாறு கூறுகின்றார். நிர்வாகத்துறை பரீட்சையில் சித்தியடைய முடியாதவர் இங்கே பாராளுமன்ற கமராவுக்கு முன்னால் வீரவசனம் பேசுகிறார். அவர் மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. நாங்கள் அபிவிருத்திகளை செய்கின்றோம். இவரின் கதையால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே தமிழரின் கலாச்சாரமாகும். அதைக்கூட கடைப்பிடிக்கத் தெரியாதவர் அவருக்கு யாரென்று தெரியாது. பக்கத்து வீடா அயல் வீடா என்று அவருக்கும் தெரியாது. அவர் யாருடன் இருக்கின்றார் என்பது கூட தெரியாதவர்.

இனவாதத்தில் வலி ஏற்பட்ட போது தமிழ் கட்சிகளும், சிங்கள கட்சிகளும் சந்தோசமாக இருந்தனர். அவர்களுக்கு இனவாதத்தின் ஊடாகவே உறங்கி பழக்கம். ஆனால் நாங்கள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி நல்ல பயணத்தை உருவாக்க முயற்சிக்கும் போது திரும்பவும் இவ்வாறு செய்து நாட்டு மக்களை அழிக்க வேண்டாம்.

தென்பகுதியில் உள்ள ஆங்கில பாடசாலையிலேயே அவரின் பிள்ளை படிக்கின்றது. அவரால் ஒழுங்காக தமிழிலில் கூட முகப்புத்தகத்தில் எழுதத் தெரியவில்லை. நீங்கள் தமிழரா என்று கேட்கின்றோம். ஒருவேளை சிங்களவராக மாறியிருந்தாலும் மாறியிருக்கலாம். அவர் கொழும்பில் தான் இருக்கின்றார். யாரை திருமணம் செய்தை கூற முடியாதவர்கள்கூட தமிழரின் கலாச்சாரத்தை உயர்த்தப் போகின்றார்களா?.

இப்போது தமிழ் வசனங்களை பேசி தமிழரை உசுப்பேற்றுகின்றார். உசுப்பேற்றி தமிழரை கொலை செய்த வரலாறே உள்ளது. நாங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என ஒருமித்த நாட்டை கட்டியெழுப்ப ஆதரவை தாருங்கள் என்று கோருகிறோம் என்றார்.