இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப்பார் - உதய கம்மன்பில


இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப்பார். நான் கூறுவது பொய் எனில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள். ஆதாரங்களுடன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசாங்கத்தின் பொய்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. மக்கள் இன்னும் தாய் நாட்டை நேசிக்கின்றனர் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பேரணிக்கு இந்த அரசாங்கத்தை போன்று அஞ்சவில்லை. எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறிவித்த அன்றைய நாள் முதல் ஆளுங்கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அதனால் எங்கு சென்றாலும் நுகேகொடை, 21 என்ற இரு வார்த்தைகளையும் மறக்காமல் கூறுகின்றார்.

எதிர்க்கட்சிகள் பிளவடைந்திருப்பதால் தொடர்ந்தும் நான்கு ஆண்டுகளுக்கு பொய்களைக் கூறி ஆட்சியை முன்னெடுக்கலாம் என்று அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் நாங்கள் உங்கள் கனவை கலைத்து விட்டோம். இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிக்கும் தினம் இன்றாகும். நீங்கள் வீட்டுக்கு செல்லும் நாட்களை இன்றிலிருந்து எண்ணத் தொடங்குங்கள். கட்சித் தலைவர்கள் வௌ;வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும் கிராம மட்டத்தில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து விட்டனர்.

எனவே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளையும் அடுத்த கூட்டத்தில் நாம் மேடையேற்றுவோம். போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாப்பதற்காகவே நுகேகொடை கூட்டம் என ஜனாதிபதி கூறி இருக்கின்றார். இந்த மேடையில் பேசிய எவருமே போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக ஒரு கருத்தை கூட கூறவில்லை. உங்கள் பொய்களை நாம் நம்பவில்லை என்பதை காண்பிப்பதற்காகவே இன்று மக்கள் இங்கு வருகை தந்திருக்கின்றனர்.

எம்மில் ஊழல் மோசடியாளர்கள் இருந்தால் அவர்களை கைது செய்வதற்கு நாம் எதிர்ப்பினை வெளியிடப் போவதில்லை. ஆனால் தமது பொய்களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காகவும் எம்மை கைது செய்ய முற்பட்டால் அந்த முயற்சி வெற்றியளிக்க இடமளியோம். ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சுமத்தியே பொய் பழிகளுக்காக இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முழு முழு நாட்டையும் ஏமாற்றியதற்காகவும் நாட்டு பிரஜைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இருப்பார். நான் கூறுவது பொய் எனில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள். ஆதாரங்களுடன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்றார்.