
மாவனெல்ல – ரம்புக்கணை வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தை உட்பட நான்கு பயணிகள் சிக்கிக் கொண்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 37 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால், தலகொல்ல பாலத்திற்கு அருகில் ரம்புக்கணை - மாவனெல்ல வீதியினூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpeg)





