முஸ்லிம் பெண் தாதியர்கள் தங்கள் கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? - ஹிஸ்புல்லாஹ் சபையில் கேள்வி !
முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதை உறுதிப்படுத்தி சுகாதார அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை தொடர்பாக கடந்த சில நாட்களாக கருத்தாடல்கள் சமூக மட்டத்திலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்ற முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இந்தப் பாராளுமன்றத்திலே ஒரு தனிநபர் பிரேரணையை நான் கொண்டு வந்தேன். அந்தப் பிரேரணை மீது நான் பேசுகின்ற போது பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினேன்.
இன்று தாதிமார் தொழிலென்பது சகல மக்களுக்கும் தேவையான, சகல மக்களும் பங்குபற்றக்கூடிய, சகலரும் நம்பியிருக்க வேண்டிய ஒரு பொதுவான தொழிலாக இருக்கின்றது.
அப்படியான ஒரு பொதுவான தொழிலிலை சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கலாசாரங்களுக்கும் சமய அனுஷ்டானங்களுக்கும் ஏற்ற வகையில் சமயம் அனுமதிக்கக்கூடிய வகையில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் .
முஸ்லிம் பெண்கள் காற்சட்டையின்றி மேலாடை மாத்திரம் அணிவதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத காரணத்தினால் அந்தத் தொழிலில் பெருமளவில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றார்கள், எனவே, முஸ்லிம் தாதியர்கள் தங்களின் மார்க்கம், கலாசாரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சீருடை அணிவதற்கு வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறான காரணங்களுக்காக முஸ்லிம் பெண் தாதியர்களுக்கு காற்சட்டை அணிவதற்கான அனுமதி வழங்க வேண்டுமென இந்த சபையில் தனிநபர் பிரேரணையை கொண்டு வந்திருந்தேன்.
குறித்த பிரேரணை தொடர்பாக அப்போதிருந்த சகல இனத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்தாலோசித்து ஆதரவாக செயற்பட்டதுடன் அன்றைய சபாநாயகராக இருந்த சபாநாயகர் மர்ஹும் எம்.எச் முஹம்மட்டும் முஸ்லிம் தாதியர்கள் அவர்களின் கலாசார முறைப்படி சீருடை அணிய இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரம் இறுதியில் அன்றைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரத் அனுமதியுடன் குறித்த எனது பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சபாநாயகரால் குறிப்பிடப்பட்டு அங்கீகாரத்தை வழங்கியது.
இவ்வாறான பின்னணியில் அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் எல்லா அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம் தாதியப் பெண்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் அணிந்து, கொண்டிருந்ததுடன் இது தொடர்பில் எந்த ஒரு பிரச்சினையும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தாதியர்களாக இன்று வரை எல்லா மருத்துவமனைகளிலும் தங்களுடைய கடமைகளை புரிகிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தேசிய தாதியர் பயிற்சி பாடசாலை மற்றும் வேறு சில வைத்தியசாலைகளிலும் இவ்வாறு காற்சட்டை அணிய அனுமதி இல்லை என்ற ஒரு முறைப்பாடு எம்மிடம் வந்திருக்கின்றது.
நீங்கள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்ற களுத்துறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் சகல இன மக்களுடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய அதேபோன்று அனைத்து இன மக்களும் மதிக்கின்ற ஒரு அமைச்சர் என்ற வகையிலும் இது தொடர்பாக தங்களது அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? என்றார்.


.jpeg)

.jpg)






.jpeg)