மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் - நாமல் ராஜபக்ஷ



'பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்' என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல்,

அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்தாலும் அதற்கு அஞ்சாமல் தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கூடியுள்ள சகல எதிர் காட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எந்த ஒரு தனிப்பட்ட தேவைக்காகவும் நாம் இங்கு கூட வில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனுக்காக அவர்களுக்கான போராட்டத்திற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு எமது அரசியல் குழு தயாராக உள்ளது.

எல்லையற்று வழங்கிய வாக்குறுதிகளையும் கூறிய பொய்களையும் மக்களுக்கு உணர்த்துவது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகிய எமது கடமையாகும். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்திவிட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தமது அரசியல் தேவைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகின்றனர். அரசியல் செய்வதற்கு ஜனாதிபதி இருக்கின்றார், எனவே அரசியலில் இருந்து விலகும் மாறு பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

அரசாங்கத்துக்கும் எமக்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளை நாம் அரசாங்கத்துடன் மோதி தீர்த்துக் கொள்கின்றோம். அதில் பொலிசார் தலையிடத் தேவையில்லை. போதைப் பொருட்களை கைப்பற்ற வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் துறைமுகத்திலிருந்து அனுமதியின்றி அனுப்பப்பட்ட 323 கொள்கலன்களிலுள்ள போதைப்பொருட்களும் உள்ளடங்களாக அனைத்தையும் கைப்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

போதைப் பொருள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தும் அதே வேலை தமது கட்சியினர் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டால் அதனை மூடி மறைக்கின்றனர். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. அரசாங்கத்தின் அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றியளிக்காது.

'பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்' என்று எங்கள் மக்கள் கூறிய செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்று இங்கு உறுதியாக கூறுகின்றேன் என்றார்.