தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்குட்பட்டவர்கள் 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
மேலும், 2025ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி பாதிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் 7.6க்கு 1 என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ஆண்களே பெரும்பாலான தொற்று பாதிப்புகளுக்கு தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முதல், இலங்கையில் மொத்தம் 6759 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 5366 ஆண்கள் மற்றும் 1573 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரித்து வரும் போக்குக்கு மத்தியில், தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு மற்றும் வெளிப்பாட்டிற்குப் பிந்தைய தடுப்பு உட்பட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆய்வில் இருப்பதாகவும் விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




.jpg)







