
களுத்துறை தெற்கு, கல்லஸ்சேன, குணதிலக்கவத்த பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர், யாரோ ஒருவர் கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே சென்று பார்த்துள்ளார். பின்னர் குறித்த வீட்டு உரிமையாளர், கிணற்றில் இளைஞன் ஒருவன் விழுந்திருப்பதை கண்டு உடனடியாக பிரதேசவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார்.
பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் இளைஞன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












