திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும் : புத்தர் சிலை குறித்து கலந்துரையாடலில் சில முடிவுகள் எட்டப்பட்டன - ரொஷான் அக்மீமன



திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸார், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சில பேர் இணைந்து செயல்படுத்த முயன்ற இனவாத அரசியலை தோற்கடிக்க தலையிட்ட திருகோணமலை மாவட்ட அனைத்து மூத்த பிக்குமார்கள் மற்றும் மத தலைவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

அதேபோல், வெளியிலிருந்து வந்த சிறிய குழுவொன்று திருகோணமலையின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சித்ததை உணர்ந்து அந்த தருணத்தில் அதற்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற திருகோணமலை மக்களைப் பற்றி நான் உண்மையிலே சந்தோசமடைகிறேன்.

மேலும் இந்த சம்பவத்தை இன மோதலாக மாற்ற முயன்ற இனவாத அரசியல்வாதிகளின் ஊக்குவிப்புகளுக்கு இரையாகாமல், அமைதியாக செயல்பட்ட சிங்கள, தமிழ் சகோதர சகோதரிகளின் செயல் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

திருகோணமலை என்பது ஒரு வானவில் போல அழகான நகரம். அதன் அழகு புலப்படும் தருணம் அனைத்து நிறங்களும் ஒன்றாகத் தெரிவதிலேயே உள்ளது.

நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்து நடத்திய கலந்துரையாடலி சில முடிவுகள் எட்டப்பட்டன, அதில் புத்தர் சிலையை விகாரைக்கு சொந்தமான குறித்த இடத்தில் வைப்பது, விகாரஸ்தானத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடங்கள் இருந்த நிலத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் எல்லை குறியீடுகள் வைப்பது, அந்த நிலம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்கும் திருகோணமலை நகரம் நகர அபிவிருத்தி ஆணையத்திற்கும் உட்பட்ட பகுதியாக இருப்பதால், எந்தக் கட்டிடம் அமைக்க வேண்டுமானாலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்று சட்ட பிரச்சினைகளை தவிர்ப்பது ஆகய முடிவுகள் எட்டப்பட்டன.

திருகோணமலைக்கு தலைமை வழங்குவது என்பது உண்மையில் சவாலான பொறுப்பாகும். ஏனைய மாவட்டங்களிலிருந்து மாறுபட்டு, திருகோணமலையில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதும் அனைத்து கலாச்சரத்தையும் பின்பற்றுவோரின் விதிமுறைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்பதும் இதற்க்கு காரணமாகும்.

நாங்கள் கண்ட பழைய அரசியல் என்பது இனத்தின் படி மக்களை பிரித்து ஆழ்ந்த அரசியலாகும். ஆனால் அந்த ஆட்சி எமக்கு விட்டுச்சென்ற இனவாதத்தின் பின்விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் ஆட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று அல்லாமல், “திருகோணமலையின் மக்கள்” என்று அனைவரையும் மதிக்கும் ஆட்சியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். அவர்களின் கலாச்சார அடையாளங்களில் வேறுபாடே ஏற்றுக்கொண்டு, எல்லா மதத்தையும் மதிக்கின்ற ஓர் தினசரி வாழ்வை நிலைநாட்டுவதே எங்கள் பயணமாகும். இந்த பாதையை தனிப்பட்ட அரசியல் நலத்திற்காக எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.