வருடாந்தம் நுண்ணுயிர் கொல்லி (ஆண்டிபயாடிக்) எதிர்ப்பு மீள் சுழற்சியினால் உயிரிழப்பவர்களின் வீதம் 5 – 15 ஆக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதுடன், 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் பதிவாகிய மரணங்கள் சுமார் 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நுண்ணுயிரியல் வைத்திய விஞ்ஞான பீடத்தின் தலைவர் வைத்திய நிபுணர் ஜயந்த்தி எல்விட்டிகல சுட்டிக்காட்டியுள்ளார்.
நுண்ணுயிர் கொல்லி (ஆண்டிபயாடிக்) எதிர்ப்பு மீள்சுழற்சி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களை தெளிவுப்படுத்தும் நோக்குடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மனித மற்றும் விலங்குகளின் உடலில் உட்புகக் கூடிய பற்ரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை நுண்ணுயிர் கொல்லிக்கு இசைவாக்கமடைந்து எதிர்விளைவுகள் வெளிக்காட்டாத நிலை நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியாகும். உலகளாவிய ரீதியில் முதல் 10 சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சூழற்ச்சியும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக நுண்ணுயிர் கொல்லிகளை எடுத்துக் கொள்வதால் அவை காலப்போக்கில் நோய் கிருமிகளுக்கு இசைவாக்கம் அடைகின்றன.
கடந்த 30 வருடக் காலப்பகுதியில் புதிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கண்டறியப்படவில்லை. தற்போது மிக குறைவான மருந்துகளே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகளில் மரபணு மாற்றம் ஏற்பட்டு முன்பைவிட அதிக வீரியத்துடன் புதிய பிறழ்வுகள் உருவாகும் பட்சத்தில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் எம்மிடமில்லை. ஆகையால் பொதுமக்கள் வைத்திய பரிந்துரையின்றி, தேவைக்கு மேலதிகமாக நுண்ணுயிர் கொல்லியை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை உருவாகலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சி காரணமாக 1.27 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகலாம் என எதிர்வுக் கூறப்பட்ட போதும், சுமார் 4.95 மில்லியன் மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் 2050 ஆண்டளவில் 39 மில்லியன் பேர் மரணிக்களாம் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலும் வருடாந்தம் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியினால் உயிரிழப்பவர்களின் வீதம் 5 – 15 ஆக அதிகரித்து வருகின்றமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் பதிவாகும் மரணங்கள் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. தெற்காசிய பிராந்திய நாடுகளிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளிலும் இதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் ஆய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது என்றார்.







.jpeg)

.jpeg)

%20(1).jpg)

