
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பது தொடர்பாக, அந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக நெற் செய்கை தொடர்பில் கவனம் செலுத்தி நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய பயிர்கள் குறித்து நாட்டில் இதுவரை ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் தயாரிக்கப்படவில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த சுட்டிக்காட்டினார். உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, அந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், நுகர்வோர் தாங்கிக் கொள்ளக்கூடிய விலையில் வெங்காயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அதற்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்தத் தீர்மானங்களை எடுக்கும்போது சரியான தரவுகளின் அடிப்படையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால் காந்த விளக்கினார்.
இதன்போது, பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை முறைமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உள்ளூர் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான நிலைபேறான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான வியூகங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவசாயத் திணைக்களம் தயாரித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் 17% ஆக இருக்கும் பெரிய வெங்காய உற்பத்தியை 2026 ஆம் ஆண்டில் 22% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 27% ஆகவும் உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு அநீதி இழைக்காத வகையில், பெரிய வெங்காயத்திற்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. அத்துடன், சேமிப்புக் கிடங்குகள் உட்பட விவசாயிகளின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது தாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை என இங்கு சுட்டிக்காட்டிய விவசாயிகள், அந்த அபாயத்தை எதிர்கொண்டு தாம் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதாகவும், அதிக வருமானம் ஈட்டக்கூடிய துறையான பெரிய வெங்காயச் செய்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.



.jpg)







