நாமல் ராஜபக்ஷ பட்டச் சான்றிதழ் தொடர்பில் சந்தேகங்கள் , உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிட்டி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன்

நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும். சிடி யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார்.விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.