இந்தச் சம்பவம் குறித்து தவறான செய்திகள் உருவாக்கப்படுவதால், உண்மையான நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக இந்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே சமரசம் இன்மையை உருவாக்க வாய்ப்புள்ளதாக இலங்கை பொலிஸார் அவதானித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசம் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பகுதியாக இருப்பதால், ஏதேனும் சதி நோக்கமுள்ள நபரால் இந்தச் சம்பவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு புத்தர் சிலைக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தப்பட்டால், அது பிரதேசத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பெரும் பிரச்சினையாக அமையக்கூடும். எனவே, புத்தர் சிலையை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அகற்றி, திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நேற்று (16) கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்களத்தால் துறைமுகப் பொலிஸில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், சட்டவிரோத கட்டுமானப் பணிகளை நிறுத்தச் சென்றபோது, அங்கு கூடியிருந்த ஒரு குழுவினர் கலவரம் செய்ததாகவும், அதனை பொலிஸார் கட்டுப்படுத்தியதாகவும், ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தாக்குதல் நடத்தவில்லை என்றும் பொலிஸார் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது பிரதேசத்தில் சமாதானமான நிலைமை நிலவுவதாகவும், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்ட புத்தர் சிலை, மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்காக மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயங்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




.jpg)







