புத்தர் சிலை விவகார நாடகம் எமதாயின் அதனை அரசாங்கமே அரங்கேற்றியது - நாமல் ராஜபக்ஷ


திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் இரண்டு பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்களா, புத்தர் சிலை விவகார நாடகம் எமதாயின் அதனை அரசாங்கமே அரங்கேற்றியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. பாதாளக் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் தான் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார்.

பாதாளக் குழுவினர் பகிரங்கமாக துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்தை மேற்கொள்வார்களாயின் ஒன்று அரசாங்கம் அதற்கு அனுசரணை வழங்க வேண்டும் அல்லது தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்திருக்க வேண்டும்.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நுவரெலியாவில் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை கண்டுப்பிடித்ததாக குறிப்பிட்டார்கள். அந்த நிறுவனத்துக்கு என்னவாயிற்று, யாரை கைது செய்தீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்ட விடயம் பற்றி ஆளும் தரப்பினர் பல விடயங்களை குறிப்பிட்டார்கள். பொதுஜன பெரமுனவின் நாடகத்தை, ஐக்கிய மக்கள் சக்தி தோளில் சுமந்துச் செல்வதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்கள். இந்த விடயம் எனது நாடகமாயின் ஜே.பி.பி தான் அந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்த போது அங்கு இரண்டு பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளார்களா, இந்த அரசாங்கம் மதத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்படவில்லை என்றார்.