ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை !


கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்று கூறிக்கொண்டு, அங்கு பௌத்த சின்னங்களை வைப்பதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"இவரைப் போல பலரைச் சந்தித்துள்ளதாகவும், எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது" எனவும் ஞானசார தேரர் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்:

"எமது தமிழர் தாயகத்தினை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது" எனவும்,

"பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு; இச்செயற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு இனியும் இருக்க மாட்டோம்" எனவும் கூறினார்.

அத்துடன், "தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இவ்வாறான இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது" எனவும் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.