மன்னாரில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது !


மன்னார், அடம்பன் - வட்டக்கண்டல் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைத்த, இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

புதையல் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்றை இந்திய நாட்டவருக்கு 300 மில்லியன் ரூபாய்க்கு விற்க முற்பட்டபோது, ஐந்து சந்தேக நபர்களையும் இந்திய நாட்டவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புல்மோடை, அடம்பன், பெதுருதுட்டுவ, ஹிங்குல மற்றும் ஹெட்டிவீதிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அமேநேரம் 59 வயதுடைய இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் இருந்து, குறித்த கல் தொடர்பான அறிக்கைகள் பெறப்படவுள்ளன.

மன்னார் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.