தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு ; பொலிஸார் சந்தேகம் !



களுத்துறையில் அளுத்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் கருகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அளுத்கமை, களுவாமோதர பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய முதியவர் ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முதியவரின் மகன், அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பதில் எதுவும் கிடைக்காததால் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, முதியவர் வீட்டில் உள்ள கதிரையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் நீதவான் விசாரணைகளுக்குப் பின்னர் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.