வெளிநாட்டு துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது !


நீர்கொழும்பு, குரானாவில் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வர்த்தகர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஆறு அங்குல நீளமுள்ள அந்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை துப்பாக்கி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குரானாவில் பகுதியில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் குறித்த வர்த்தகரின் வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார், அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது, இந்த துப்பாக்கியை மறைந்த தனது தந்தை கொடுத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.