மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை லொறியில் எடுத்து சென்றவர் கைது



அநுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை லொறியில் எடுத்து சென்ற சந்தேக நபர் மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றிணை அடுத்து காந்தி பூங்காவுக்கு முன்னாள் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3 பரல்களில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பகுதியில் உள்ள மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிமனைக்கு கொண்டு சென்று அங்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அது மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணை என கண்டறியப்பட்டது.

அநுராதபுரம் பகுதியிலுள்ள பெரிய உல்லாச விடுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை கொத்தமல்லி மற்றும் புதிய தேங்காய் எண்ணெயுடன் கலப்படம் செய்து நிறத்தை மாற்றி புதிய எண்ணைய் போல விற்பனை செய்து வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.