வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை அன்புடன் வரவேற்று அவர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் சிறப்பு நிகழ்வு இன்று 29.01.2026 இல் பாடசாலையின் அதிபர் அழகானந்தம் ஜெயப்பிரதாபன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு கல்விவலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.வைணவி, சிறப்பு விருந்தினராக முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன், விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரி.தரணிதரன், இலங்கை வங்கி முகாமையாளர் ஞா.அரவிந்தன், கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ம.கோகிலராஜ், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் க.கேசவப்போடி, சமூக வலுவூட்டல் உத்தியோகஸ்த்தர் எஸ்.சிவகுமார் மற்றும் வெல்லாவெளி சிறி முத்துமாரியம்மன் ஆலய தலைவர் அ.யோகேஸ்வரன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தரம் 1 மாணவர்கள் மற்றும் அதிதிகள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மக்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, மாணவர்களின் கலைநிகழ்வுகள், தரம் 1 மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கல், அதிதிகள் உரை, நன்றியுரை என மிகவும் எளிமையாகவும், விசேடத்துவம் வாய்ந்ததாகவும் நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருந்தன.
இந் நிகழ்வுகளை மகிழ்ச்சிகரமாகவும், வியக்கத்தக்க வகையிலும் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஒழுங்கமைத்திருந்தமை சிறப்பம்சம் பொருந்தியதாகக் காணப்பட்டது. அத்துடன் வெல்லாவெளி மாதர் அபிவிருத்திச் சங்கம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகளை வழங்கியிருந்தனர், இதற்கான ஒழுங்கமைப்பினை 1997/1998 ஆம் கல்வியாண்டு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்தமையும், இலங்கை வங்கி முகாமையாளர் மாணவர்களுக்கான மேலும் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தமையும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் பார்வையாளர்களை பரவசமூட்டுவதாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
























