புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: ஜனாதிபதிக்கு சட்ட வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் விடுத்துள்ள 6 முக்கிய முன்மொழிவுகள் !


இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவ வேண்டும். அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும் என புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சட்டத்தரணிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு 06 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடலை முன்னிட்டு சட்டத்தரணி லால் விஜேநாயக்க,பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,கலாநிதி அதுலசிறி சமரகோன், சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, சட்டத்தரணி விரஞ்ஞன ஹேரத், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம தஸநாயக்க,சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ்,சட்டத்தரணி ஷிரால் லக்திலக, பேராசிரியர் சரித ஹேரத்,சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ,கருணாரத்ன பரணவிதாரன, சட்டத்தரணி சமன் சேனாதீர,சட்டத்தரணி ஜகன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வலியுறுத்தலை நாங்கள் வரவேற்கிறோம். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட ஒரு அரசாங்கம் இருப்பது இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பாகும்.புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் என்பது இலங்கைக்கு முக்கியமான சவாலாகும். அது அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரிதிநித்துவப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு ரீதியிலான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் அனைவரையும் உள்ளடக்குவதும் சவால்மிக்கதாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு இதுவரையில் 21 முறை திருத்தங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவைச அரசாங்கத்தின் தேவைகளை பிரதிப்பலித்துள்ளதே தவிர மக்களின் நிலைப்பாட்டை பிரதிப்பலிக்கவில்லை.அரசியலமைப்பின் 17,19 மற்றும் 21 ஆம் ஆகிய திருத்தங்கள் மாத்திரமே மக்களை பிரதிபலிக்கின்றன.

கடந்தகால அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கையின் சமூக- அரசியல் சூழலுக்கு பொருத்தமான அரசியலமைப்பு சீர்த்திருத்த மாதிரியை பின்பற்றுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலனை செய்யுமாறு நாம் முன்மொழிகின்றோம். அதன்படி பின்வரும் முன்மொழிவுகளை முன்வைக்கிறோம்.

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவுதல், அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும்.

எதிர்கால அரசியலமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக விரிவான அடிப்படையாகக் கொண்ட எவர் ஒருவரையும் தவிர்க்காத வகையில் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவான மக்கள் சார் ஆலோசனை செயல்முறையை உருவாக்க வேண்டும்.

அத்துடன் பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும்.

மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவதற்காக அரசியல் கட்சிகள், கல்வியியலாளர்கள்,சிவில் சமூகம், சமூக விஞ்ஞானிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும்.டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட வேண்டும்.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டவரைவை தயாரித்தல் வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு,இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு மூலம் நிறைவேற்றிக்கொள்வதையும் உள்ளடக்கிய வகையில் ஒரு அரசியலமைப்பு சீர்த்திருத்த செயன்முறையை பின்பற்றுதல் வேண்டும்.

அரசாங்கத்தின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கைக்கு அமைய புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும்