இலஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: கடந்த ஆண்டில் 84 பேர் கைது !


கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகளில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கைதுகளில் அதிகப்படியானோர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களாவர்; அந்த எண்ணிக்கை 30 ஆகும்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 13 பொலிஸ் சார்ஜன்ட்கள், 9 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 4 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரைத் தவிர, நீதி அமைச்சுடன் தொடர்புடைய 11 பேர், விவசாய சேவைகள் திணைக்களத்தின் 5 அதிகாரிகள், 3 கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபைகளின் 3 அதிகாரிகள் ஆகியோரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்புகள் மூலம் இடம்பெற்ற கைதுகளைத் தவிர, முன்னெடுக்கப்பட்ட ஏனைய விசாரணைகள் ஊடாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 69 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் ஆணைக்குழுவிற்கு 8,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்