முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைத் தர நிர்ணயம் செய்து வினைத்திறனாக்க நடவடிக்கை – அமைச்சர் சரோஜா போல்ராஜ்



முன்பிள்ளைப்பருவ கல்வித் துறையில் முன்பள்ளி நிலையங்களின் பௌதீகக் கட்டமைப்புக்களைத் தரப்படுத்துவதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைத் தரநிர்ணயம் செய்து, அதனை மிகவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை (29), மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் தலைமையில் சபரகமுவ மாகாணசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, முன்பிள்ளைப்பருவ மேம்பாடு குறித்த தேசிய கல்வித்திட்டக் கட்டமைப்பு தொடர்பாக அமைச்சர் விரிவான விளக்கமளித்ததுடன், 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்பள்ளி கல்வி குறித்த தேசியக் கொள்கை குறித்தும் மேலதிக தகவல்களை வழங்கினார்.

முன்பிள்ளைப்பருவ கல்வித் துறையில் முன்பள்ளி நிலையங்களின் பௌதீகக் கட்டமைப்புக்களைத் தரப்படுத்துவதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைத் தரநிர்ணயம் செய்து, அதனை மிகவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்பிள்ளைப்பருவ அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக முன்வைப்பதற்கு அமைச்சர் வாய்ப்பளித்தார். இதன்போது, சேவையாற்றும்போது தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முன்பிள்ளைப்பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புத் துறையை மேலும் தரமானதாக மாற்றுவதற்கான புதிய முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலூஷா கமகே, சபரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், சபரகமுவ மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ மேம்பாட்டு அதிகாரிகள், சபரகமுவ மாகாண முன்பிள்ளைப்பருவ மேம்பாட்டு அதிகாரசபையின் திட்ட அதிகாரிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.