மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை !


அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி தொகையைக் கொண்டு பயன்பாட்டுக்கு தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியை பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் தற்போது தமது ஆட்சியில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதிலேயே அவதானம் செலுத்தி வருகிறது.

இலங்கை நிலக்கரி சங்கத்தால் நாட்டுக்கு தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலில் ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அதாவது மோசடியை இலக்காக வைத்து தான் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலுக்கு 48 நாட்கள் கால அவகாசம் வழங்குவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் அதனை 21 நாட்களுக்கு குறைத்து தான் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் வலுசக்தி அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் நிலக்கரி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் மார்ச்சில் நிச்சயம் மின்துண்டிப்பு ஏற்படும்.

தரத்தில் குறைந்த இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மார்ச்சில் மின் துண்டிப்பு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. இது மத்திய வங்கி மோசடியை விட பாரிய மோசடியாகும். கடந்த ஆட்சி காலங்களில் கொள்ளையர்கள் மோசடி செய்தனர். ஆனால் தற்போது அரசாங்கமே நேரடியாக மோசடிகளில் ஈடுபடுகிறது என்றார்.