வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து முதியவர் பலி !


காலியில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் ஆவார்.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப தயாராக இருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவர் வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.