யுத்த காலத்தில் முறையற்ற வகையில் வெளிநாடு சென்றவர்கள் இடையூறுகளின்றி நாடு திரும்ப அனுமதி !



நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் எந்தவித இடையூறுகளும் இன்றி நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதற்கு வசதியாக தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆட்சேபித்திருந்தது.

இந்த பின்னணியிலேயே, குடிவரவு, குடியகல்வு சட்டத்திலுள்ள நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தாயகம் திரும்பும் இலங்கையர்களை எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், நாடு திரும்புவோர், யுத்த காலத்தில் நாட்டிலிருந்து சென்று, தாம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் வசித்தமைக்கான சான்றுப்பத்திரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.