பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்



இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. மத்தள விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் குறித்த சடலங்கள் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா என்ற கப்பல் கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. குறித்த கப்பலிலிருந்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு கிடைக்கப் பெற்ற உதவி கோரிக்கைக்கமைய இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தன.

அதற்கமைய காயமடைந்த நிலையில் 32 ஈரான் கடற்படை வீரர்கள் மீட்க்கப்பட்டு காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலும் 84 சடலங்களும் மீட்க்கப்பட்டன. குறித்த சடலங்கை ஈரான் தூதரக அதிகாரிடம் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் காலி பிரதான நீதவான் கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய சடலங்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நேற்றைய தினம் சடலங்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 45 உடல்களும், பிற்பகல் மீதமுள்ள 39 உடல்களும் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது