பாணந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு ஏதும் விடுக்கப்படவில்லை. தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனாலும் மக்கள் எம்மை சூழ்ந்துள்ளார்கள். எம்மை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
கடந்த காலங்களில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம்.அந்த சவால்களைக் கண்டு நாங்கள் ஒருபோதும் தப்பியோடவில்லை. தற்போதும் அந்த சவால்களை எதிர்கொண்டு கட்சி என்ற ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளோம்.
பல வாக்குறுதிகளை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராகவே திரும்பியுள்ளது. எம்மை எந்த வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
நான் பிள்ளையானை சந்தித்தேனா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பிரான்ஸ் சென்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்கள்.
மட்டக்களப்பு சிறைக்குச் சென்று பிள்னையானை சந்தித்தது உண்மை.இதில் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது. நான் ஒன்றும் சிறைச்சாலை மதிலேறி குதித்து பிள்ளையானை சந்திக்கவில்லை. சட்டத்தின் ஊடாக அனுமதிப்பெற்றே பிள்ளையானை சந்தித்தேன்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.ஆகவே நியாயமான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்குக்குச் சென்று மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டு நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் ஒன்று ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளருக்கு தேர்தல் தொடர்பில் அறிவிப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது.
மாகாணசபை முறைமைக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி மாகாணசபைத் தேர்தலை நடத்துமா என்பது சந்தேகத்துக்குரியதே, தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. முரண்பாடு இருப்பதாக காண்பிக்கும் முயற்சியை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகளை பற்றி பேசுபவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாணசபைத் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுத்தார். தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசும் இந்த அரசாங்கம் சகல மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்தாவிடினும் பரவாயில்லை வடக்கு மாகாணத்துக்கு மாத்திரமேனும் தேர்தலை நடத்த வேண்டும்.இதனை ஒரு சவாலாக அரசாங்கத்துக்கு முன்வைக்கிறேன் என்றார்.







.jpeg)





