வாகனக் கடன் எல்லைகளை மேலும் குறைத்தது மத்திய வங்கி ; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!


மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று திங்கட்கிழமை (25) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை செய்திகள்

அதற்கமைய, வர்த்தக வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லையை 60 சதவீதம் வரை குறைப்பதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக இதுவரை வழங்கக்கூடியதாக இருந்த அதிகபட்ச கடன் எல்லை, வாகனத்தின் பெறுமதியில் 70 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக 10 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மோட்டார் கார்கள், எஸ்.யு.வி ரக வாகனங்கள், வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட தனிப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குக் கடன் வசதிகளை வழங்கும்போது, அதற்காக வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் எல்லை இதுவரை இருந்த 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக 10 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டிலும் இந்தக் கடன் எல்லைகளைக் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

அதற்கமைய, கடந்த ஆண்டின் ஜூலை 17 ஆம் திகதி இது தொடர்பாகக் காணப்பட்ட பெறுமதிகள், வர்த்தக வாகனங்களுக்கு 80 சதவீதமாகவும், மோட்டார் கார்கள் மற்றும் வேன்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 60 சதவீதமாகவும் இருந்தன.

நிலவும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அந்தப் பெறுமதிகளைத் திருத்தியமைத்து, 2025 நவம்பர் 7 ஆம் திகதி இப்பெறுமதிகளை மேலும் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்தது.

அதன்படி, வர்த்தக வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 70 சதவீதம் வரையும், மோட்டார் கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கான கடன் எல்லை 50 சதவீதம் வரையும் குறைக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மீண்டும் அந்தப் பெறுமதிகளைத் திருத்தியமைத்து, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தக வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லையை 60 சதவீதம் வரையும், மோட்டார் கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லையை 40 சதவீதமாகவும் விதிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.