வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்



வனவாசல பகுதியில் ரயில் தடம் புரண்டதில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக ரயில் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் நேற்றைய (16) தினமே சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் இருவர் இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது மேலும் மூவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் உள்ளனர். அதில் ஒருவர், தடம் புரண்ட ரயிலுக்கும் அதற்கு அருகில் இருந்த மோட்டார் ரதத்திற்கும் இடையில் சிக்கியே விபத்துக்குள்ளாகியுள்ளார். அவரது கையின் மூட்டுப் பகுதியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அந்தப் பெண்ணுக்கு கழுத்தைத் திருப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற முயன்றபோது ஏற்பட்ட நெரிசலே இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு வழிமுறை ரயில்வே திணைக்களத்திடம் உள்ளது. எங்களிடம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு முறைமை ஒன்று காணப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த முறையின்படி, மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில் 105,000 ரூபாவே வழங்கப்படவிருந்தது. அது தற்போது 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாளைக்கு, ஒரு வாரம் வரை தலா 2,000 ரூபா வீதமும், அதற்கப்பால் 50,000 ரூபா வரையிலும் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையை நாம் உருவாக்கியுள்ளோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இழப்பீட்டு முறை காணப்படுகிறது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்றுள்ளவர்களின் மருத்துவ அறிக்கை அட்டைகளைப் பரிசீலித்து, இந்த இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இன்றைய தின மாலைக்குள் அந்தப் பகுதியின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, நாளை முதல் ஆரம்பமாகும் புதிய வாரத்தில் வழமை போன்று ரயில்களை இயக்குவதற்கு தற்போது திட்டமிட்டுள்ளோம்."