முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 11 பேர் உயிரிழப்பு - மூவர் மாயம்


அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல' என்ற முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் இந்தத் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்ட பின்னர், சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.