மகாஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவளித்த இருவருக்கு தலா ரூ.40,000 அபராதம்


 மகாஓயா தேசிய பூங்காவிற்குள் காட்டு யானைகளுக்கு உணவளித்த குற்றத்திற்காக இரண்டு நபர்களுக்கு தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்து தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், பொழுதுபோக்கு நோக்கத்துக்காக இரண்டு யானைக் குட்டிகள் உட்பட பல காட்டு யானைகளுக்குச் சிலர் பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஹெனனிகல பூங்கா நுழைவாயில் அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் ஐந்து நபர்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வழக்கை விசாரணைக்குட்படுத்திய நீதிமன்றம், கடந்த வியாழக்கிழமை (18) குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரின் குற்றத்தை சுட்டிக்காட்டி, மொத்தம் 80,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.