
அசாத் மௌலானா என்பவர் சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் உறுதிப்படுத்தியுள்ள பின்னணியில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஓய்வுபெற்ற கொடிநிலை அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தின் விபரம் பின்வருமாறு:
"பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கூற்றுப்படி, ஐக்கிய இராச்சியத்தின் சர்ச்சைக்குரிய 'செனல் 4' (Channel 4) ஊடகத்திற்கு அசாத் மௌலானா என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாத் மௌலானா என்பவர் ஒரு முன்னாள் எல்.டி.டி.இ (LTTE) உறுப்பினர் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) ஆதரவாளர் ஆவார். அத்துடன் அவர் நாட்டிலிருந்து தப்பி ஓடி சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள ஒருவர் என்பதுடன், அவருக்கு எதிராக இரண்டு திறந்த பிடியாணை உத்தரவுகளும் உள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பிரான்ஸிற்குச் சென்று, பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து மௌலானாவைச் சந்தித்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸிலுள்ள LTTE வலையமைப்பை அழிப்பதற்குப் பங்களிப்பு செய்த சுரேஷ் சலே, பாரிஸிலுள்ள ஒரு முன்னாள் LTTE பயங்கரவாதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவதே வேதனைக்குரிய விடயமல்லவா?
சலேக்கு எதிராக மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. மௌலானா கூறியவை அப்பட்டமான பொய் என்பதை அந்த ஆணைக்குழு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவலில் அவர் மிகவும் கேவலமான, கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளார். ஒரு இராணுவ வீரரை இந்த வழியில் நடத்துவது LTTE ஆதரவு தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்துவதற்கான ஒரு காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த இராணு வீரன் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கும் வரை அவருக்கு உரிய மரியாதையுடன் நடத்துமாறு அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, 13 நாட்களாகத் தொடர்ந்தும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சுரேஷ் சலேயின் சுகநலன்களை விசாரிப்பதற்காக இன்று (20) முற்பகலும் அவரது மகளும் மகனும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





.jpg)






.png)