மத்திய வங்கிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வியாழக்கிழமை (4 )போராட்டத்தின் போது நாட்டன் பல பகுதிகளில் இருந்து சிவில் அமைப்புகள் போராட்ட குழுக்களால் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்கள், நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எமது ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். எமது பிரச்சினைகளுக்கு உங்களுடன் ஒரு கலந்துரையாடல் அவசியம். அந்த கலந்துரையாடலைப் பெற்றுக்கொண்ட பின்னரே நாம் மீண்டும் வீடுகளுக்குத் திரும்புவோம். மத்திய வங்கிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று நாம் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்.
கடந்த கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான தடைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். பாதுகாப்புப் படையினரையும், பொலிஸாரையும் பயன்படுத்தி எமது போராட்டத்தை நசுக்க முற்பட்டாலும், எமது நியாயமான போராட்டத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதேபோல, இப்போதும் பொலிஸாரைக் கொண்டு எங்களை அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். எமது வரிப்பணத்தினால் பராமரிக்கப்படும் இந்த அதிகாரக் கட்டமைப்பு, மக்கள் சார்பாகச் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
எமக்கு தனிப்பட்ட நலன்கள் இருந்திருந்தால், பணம் பெற்றுக்கொண்டு ஒதுங்கியிருக்க முடியும். ஆனால், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் இன்றுவரை நாம் களத்தில் நிற்கிறோம். குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடுகளைச் செய்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த நாங்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தோம். அந்தப் போராட்டத்தின் பலனாகவே இன்று பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்திக்க விரும்புகிறோம். எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொலிஸார் அல்லது பாதுகாப்புப் படைகளைக் கொண்டு எமது குரலை நசுக்க நினைக்க வேண்டாம். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில், எமது மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. எமக்கான தீர்வு கிடைக்கும் வரை, எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, இந்த இடத்திலிருந்து நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய வங்கியின் கீழ் இயங்கும் சில தனியார் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு பெருமளவில் திரண்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்துள்ளனர். மத்திய வங்கியின் கண்காணிப்புப் பிரிவு இதற்கு உடந்தையாக இருந்துள்ளது. குறிப்பாக, குறித்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்த ஏழை மக்கள், தமது வாழ்நாள் சேமிப்பை இழந்த நிலையில், மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மக்களைத் தடுப்பதற்கு முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சவப்பெட்டியுடன் ஜனாதிபதி செயலகத்துற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே முறுகல் நிலை உருவானது. இருப்பினும், எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி நேரில் வந்து தமக்குப் பதிலளிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பினர். சமூகத்தினருக்கு இடையூறு விளைவித்தலையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் தடுக்கும் பொருட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஜனாதிபதி செயலகப் பகுதியில் சில மணித்தியாலங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.








.jpg)




